×

அபாயம் உணரும் முன்பே அடிமையாகி விடுவார்கள்: ஜீவானந்தம், வெங்கடேஷின் நண்பர், தர்மபுரி.

தர்மபுரியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(28). தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணி புரிந்து வந்த இவர், ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில், லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால், மனவேதனையடைந்த அவர், கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி கொரோனா சிறப்பு பணிக்காக, சேலம் மாவட்டம் தலைவாசலுக்கு வந்த போது, தான் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பரான ஜீவானந்தம் கூறியதாவது: முதலில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு,போனசாக பணம் தருவதாக இந்த நிறுவனங்கள் ஆசை காட்டுகின்றன. பின்பு அவர்களை அதில் பணம் செலுத்த வைத்து ஏமாற வைக்கின்றனர்.

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் பேர், தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதனால் பெருமளவில் பணத்தை இழக்கின்றனர். விளையாட தொடங்கும் ஆரம்பத்தில், சிறிய அளவில் பணத்தை வெல்லும் இளைஞர்கள், நாளடைவில் அதிக பணத்தை கட்டி விளையாடும் போது, தோல்வியடைவதை தவிர்க்கவே முடியாது. அதற்கு ஏற்பவே இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும். விட்டதை பிடிக்கிறேன்  என தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் கையில் இருப்பு முழுவதும் கரைந்துபோன பிறகு, கடன் வாங்கியாவது ஆன்லைனில் சூதாடுவார்கள். இதனால், கையில் உள்ள பணத்தையும் இழந்து கடன்காரர்களாகும் நிலை ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில், பணத்தையும், மனநலத்தையும் இழந்து நடைபிணமாக திரியும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மதுவிற்கு அடிமையானால் அதிலிருந்து மீள்வது சுலபம். ஆனால் ஆன்லைன் ரம்மியில் மூழ்கிவிட்டால் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும். அதிலிருந்து மீள்வது கடினம். எனது நெருங்கிய நண்பர் ஒருவர், கடந்த 3 ஆண்டுகளாக  ஆன்லைன் ரம்மி விளையாடினார். முதலில் ஆயிரம் முதல் ரூ10 ஆயிரம் வரை பணத்தை கட்டி விளையாடினார். குறிப்பிட்ட நாள் வரை ஜெயித்தார். ஆனால் போகப்போக தோல்வியடைந்து பணத்தை இழந்து விட்டார். ஒரு கட்டத்தில் கடன் வாங்கி விளையாடினார். அப்போதும் தோல்வியே கிடைத்தது.

இதனால் குடும்பத்தில் பெரும் பிரச்னைகள் ஏற்பட்டது. பணத்தை கொடுப்பதுபோல் கொடுத்து, அதிகளவில் நம்மிடமிருந்து பறிப்பதுதான் ஆன்லைன் சூதாட்டத்தின் முதல் இலக்கு. ஆன்லைன் சூதாட்டத்தால், பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, வேலைக்கு செல்வதையும் குறைத்துக் கொள்கின்றனர். அதோடு பணம் இல்லாத போது, வீட்டிலிருந்து பணத்தை திருடுவது, குடும்பத்தில் சண்டையிடுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புற இளைஞர்களும் தற்போது ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி, தங்கள் பணத்தையும் எதிர்காலத்தையும் தொலைத்து நிற்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

எனவே, இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். தற்போது டிக்டாக் போன்ற சீன செயலிகளில் நுழைய முடியாதவாறு செய்துள்ளனர். ஆன்லைன் சூதாட்ட செயலிகளையும், இது போன்று தடை செய்தால் தான், பெரும் சீரழிவு முடிவுக்கு வரும். ஒரு கட்டத்தில் கையில் இருப்பு முழுவதும் கரைந்துபோன பிறகு, கடன் வாங்கியாவது ஆன்லைனில் சூதாடுவார்கள். இதனால், கையில் உள்ள பணத்தையும் இழந்து கடன்காரர்களாகும் நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில், பணத்தையும், மனநலத்தையும் இழந்து நடை பிணமாகிறார்கள்.

Tags : Jeevanandam ,Dharmapuri ,Venkatesh , They become addicted before they realize the danger: Jeevanandam, Venkatesh's friend, Dharmapuri.
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்